ஆர்பாட்டங்களும் ....
அனாதை கிராமங்களும் ....
கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு என்றார் இந்தியாவின் தேச தந்தை காந்தியடிகள். மிக மிக சரியான கூற்று. இந்தியாவின் மனிதம் இன்றும் கெடாமல் இருப்பது கிராமங்களில் தான். மனிதத்தன்மை மட்டுமல்ல, மனிதன் வாழ்வதற்கு சுகாதாரமான காற்று முதல் சிறந்த உணவு வரை கிராமங்களில் தான் கொட்டிக்கிடக்கிறது. சுற்றத்தில் பிறப்பதும் தெரியாமல் , இறப்பதும் அறியாமல், அறிந்தாலும் அன்பு இல்லாமல், கடமைக்காக கண்டு கொண்டு அவரவர் தம் கடமையிலேயே கண் ஆயிரம் வைத்து நவ யுகத்தின் நாகரிகமாய் தோன்றும் நகர வாசிகளின் பார்வையில் மூன்றாம் அல்ல நான்காம் தர மக்களாய் அல்லது பட்டிக்காட்டானாய், இருக்கும் கிராமத்தான், பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு சக மனிதனின் வாழ்க்கையை தெரிந்து , குணங்களை அறிந்து அரவணைப்பை பெற்று, சுற்றத்தில் நடக்கும் ஒவ்வொரு சுக துக்கங்களிலும் தனக்கு ஏற்பட்டதை போன்று பிரதிபலிப்பதை பட்டிக்கட்டானிடமும், கிராமத்தானிடமும் தான் பார்க்க முடிகிறது.
ஆணுக்கு பெண் சரிசமம்தான் என்று போலித்தனமாய் பேசும் , ஆண்களின் வீடுகளில் அவர்களின் பெண்கள் கொடுமைபடுவதையும், பெண்களின் வீடுகளில் பெண்களால் சித்ரவதைக்கு ஆளானவர்களின் நல சங்கத்தின் உறுப்பினர்கள் நடமாடுவதையும், இவர்கள் பின்பற்றும் கலாச்சாரங்கள் ஓன்று கூட இந்தியாவின் கலாசாரத்தோடு ஒத்து போகாததை நம் கண்களால் காண முடிகிறது. செய்திகளால் அறிய முடிகிறது. ஆனால் பட்டிக்கட்டான்கள் பேணும் பெண்ணியத்தையும் .......( சமைத்தது சரி இல்லை என்று தட்டை தூக்கி எறிந்ததும் ஆணுக்கு பெண் நிகர் என்று சமைத்த பாத்திரத்தையே தன் தலையில் வாங்கிக் கட்டிக்கொண்டு நாகரிகமாய் நகர்வது நகரவாசிகளின் பெண்ணியம், சமைத்த சாப்பாடு சரியில்லை என்றாலும் சமைத்தவர்களின் மனது புண்படாமல் நன்றாக இருந்தது என்று மகிழ்ச்சி படுத்துவது கிராமத்தானின் பெண்ணியம் ) இவர்களிடம் உறவாடும் உண்மையான இந்தியாவின் கலாச்சாரத்தையும் இன்று அல்ல இறைவன் நாடினால் என்றென்றும் காண முடியும் நம் கிராமங்களில்.
இன்னும் நிறைய பல பல நல்ல விஷயங்களையும் , மனிதத்தன்மையுள்ள மனிதர்களையும் , கொண்டுள்ள கிராமங்களின் அடிப்படை வசதிகள் இன்று நாம் காணும் போது நம்மை கஷ்டப்படுத்துகிறது.
* அவர்களின் வாழ்விடங்களின் சரியான வடிகால் இல்லாமல் தேங்கும் கழிவுகள்,
* நடக்க கூட பாதை இல்லாமல் புண்ணாகும் கால்கள்,
* அவசர காலத்தில் காப்பாற்ற முடியாமலேயே போகும் உயிர்கள் ,
* அப்படியே இருந்தாலும் வெளிச்சம் இல்லாமல் படிக்க முடியாமலேயே போகும் மேதைகள் ,
* கண்டுபிடித்தும் வெளிஉலகம் கண்டு கொள்ளாத விஞ்சானிகள் ,
* தான் கண்டு பிடித்ததை வெளியுலகம் களவாடியதை கண்டு குமுறும் அப்பாவிகள்,
இப்படியே இன்னும் அவர்களின் பல விசயங்கள் அடிப்படை வசதி இல்லாமலேயே முடங்கி விடுகின்றன.இந்த அடிப்படை வசதிகளுக்காக போராடும் போர்குனமிக்கவர்களால் நடக்கும் ஆர்பாட்டங்கள் .
இது நமது இந்தியாவில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக இல்லை, மணியொரு மேனியும் நொடியொரு வண்ணமுமாக இருக்கிறது. அடிப்படை வசதிக்களுக்காக மட்டுமல்ல ஆர்பாட்டங்கள், விலைவாசி உயர்வு, அரசுக்கு எதிராக, எதிர் எதிர் கட்சிகளுக்கு எதிர் எதிராக, கட்சிகள் மட்டுமல்ல தன்னார்வ இயக்கங்கள், சுயஉதவிக்குழுக்கள், போன்றவர்களும் ஆர்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். திணரடிக்கவும், குலுங்க வைக்கவும், ஸ்தம்பித்து போகவும் வைக்கிறார்கள் . ஆர்பாட்டங்கள் நடக்காத நாளே இந்தியாவில் இல்லை என்று உறுதியாக சொல்ல முடியும், அந்த அளவுக்கு ஆர்பாட்டங்கள் , பேரணிகள், ஊர்வலங்கள்......... இவை அனைத்துமே சரிதான்.....!!!
ஆனால் இந்த ஆர்ப்பாட்டங்களிலும் ,பேரணிகளிலும் ,ஊர்வலங்களிலும், என்ன பயன் என்பதே மிகப்பெரிய கேள்விக்குரியதாய் இருக்கிறது. ஆர்பாட்டக்காரர்கள் செய்யும் ஆர்ப்பாட்டங்கள் லட்சம் ஆர்ப்பாட்டங்களில் ஒன்றிரண்டு தான் ஆர்பாட்டம் ஏற்படக் காரணமாய் இருந்ததை சரி செய்ய முடிந்துள்ளது . அப்படியானால் மற்ற ஆர்ப்பாட்டங்களின் கதி........!!!!! ஆர்பாட்டம் நடக்கும் நாளில் அந்த ஆர்ப்பாட்டத்தை சவ பெட்டியில் மூடி புதைக்கத்தான் முடிகிறது.சவபெட்டியில் மூடி புதைக்கத்தான் அத்தனை நபர்களும் குறிப்பிட்ட நாளில் திரள்கிறார்கள். இதை ஆர்பாட்டகாரகளால் ஒத்துக்கொள்ள முடியாவிட்டாலும் இது தான் கசப்பான உண்மை . ஆர்பாட்டத்தின் வெற்றி ஆர்பாட்டக்காரகளின் எண்ணிக்கையிலோ வந்த வாகனத்தின் எண்ணிக்கையிலோ அல்ல, ஆர்பாட்டத்தின் நோக்கம் சரிசெய்ய படுவதை தான் அதன் வெற்றி என்று சொல்ல முடியும் .
சமீபத்தில் கூட கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவர் பேட்டியில் விலை வாசி உயர்வை எதிர்த்தும் ஊழல்களை எதிர்த்தும் பிப்ரவரியில் டெல்லியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் பேரணியும் நடத்த போவதாக சொல்லி இருக்கிறார். அதற்காக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள மத சார்பற்ற கட்சிகளையும் , தொழிற்சங்கங்களையும் , ஓர் இயக்கமாக கொண்டு வந்து அனைவரும் டெல்லியை நோக்கி செல்கிறார்களாம். ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் வெற்றி பெற வாழ்த்துவது ஒரு புறம் இருக்கட்டும். இந்த ஆர்பாட்டதினால் ஏற்படும் பயன் என்ன என்பது நம்மை போலவே ஆர்ப்பாட்டக்காரகளுக்கும் முன்கூட்டியே அதாவது இப்பொழுதே தெரியும். இவர்கள் கூடும் கூட்டத்தால் விலைவாசி இறங்குமா ? ஊழல் குறையுமா ? மனித உழைப்பும் பொருளாதார விரயமும் இந்த ஆர்ப்பாட்டங்களின் மூலம் சமூக சிந்தனையுடைய சில மனிதர்களான இந்த ஆர்ப்பாட்டக்காரகளின் மூலம் வீணாவதை கண்டு மனது கஷ்டப்படுகிறது. ........நிச்சயமாக இவர்கள் சமூக சிந்தனையுடன் இருக்கிறார்கள்தான் ஆனால் இவர்களின் வழி தான் பலனில்லாமல் இருக்கிறது.
இந்த அளவு மனித உழைப்பையும் பொருளாதாரத்தையும் இந்த கட்டுரையின் முற்பகுதியில் குறுப்பிட்ட அனாதை கிராமங்களின் அடிப்படை வசதிகள் செய்ய பயன்படுத்தினால்...........எப்படி இருக்கும் என்று நினைக்கும் போதே இந்தியா தன் முதுகெலும்பு துணையுடன் தலை நிமிர நடப்பது நம் கண் முன்னே தெரிகிறது.எந்த கட்சிகள் தனக்கு வாக்கு சேகரிக்க செல்லும் கிராமங்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளது ....? எத்தனை இயக்கங்கள் செய்ததை சொல்லி மக்களின் மனதை கவர்கிறது..? எந்த செய்தித்தாள்களை பிரிக்கும் போது இந்த கட்சி இத்தனை கிராமங்களை இந்தனை வருடத்திற்கு தத்தெடுத்துள்ளது என்று படிக்க முடிகிறது....? ஏன் இதை கட்சிகளும் இயக்கங்களும் செய்ய முடியாதா என்ன ? சர்ரசரியாக ஒரு கணக்கு வைத்துக்கொண்டால் கூட இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டங்களினால் ஏற்படும் இழப்பு ஒரு வருடத்திற்கு 500 கோடியாவது இருக்கும் .
- ஆர்ப்பாட்டக்காரர்களின் அந்த ஒரு நாள் வேலைக்கான வருவாய் இழப்பு,
- ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்திற்கு செல்லும் பயண செலவு,
- ஆர்ப்பாட்டத்திற்கு வசூலாகும் தொகை,
- ஆர்ப்பாட்ட இடையூறுகளால் ஏற்படும் இழப்பு,
- ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக நடைபெறும் ஆர்ப்பாட்ட விளக்க கூட்டங்களினால் ஏற்படும் செலவு,
என்று அடுக்கிக்கொண்டே போகலாம். 500 கோடியை ஒரு குடும்பத்திற்கு சராசரி மாத செலவு 5000 ருபாய் ( நான்கு பேர் )என்று வைத்து பிரிக்கும் போது 10 லட்சம் குடும்பம் பயன்பெறுகிறது. ஒரு கிராமத்திற்கு சராசரியாக 500 குடும்பம் இருக்குமானால் மொத்தம் 2000 கிராமங்களை தத்தெடுக்கலாம். அதாவது இரண்டு மாவட்டங்களையே தத்தெடுக்க முடியும். குடும்பங்களுக்கு கொடுக்க வேண்டாம் என்றால் கிராமங்களின் அடிப்படை வசதிகள் செய்து தரலாம். கல்விச்சாலைகள் அமைத்து நாளைய மேதைகளை உருவாக்கலாம். இதனால் இந்தியாவின் மத்தியில் உள்ள மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், ஒரிசா, போன்ற மிக பின்தங்கிய மாநிலங்கள் மிக சீக்கிரமாகவே முன்னேற்றமடையும்.௦ பிரச்சினை முடிந்த பிறகு சென்று ஆர்பாட்டம் செய்வதை விட ௦௦௦ பிரச்சினைக்கு முன்னரே சென்று சமூக பணிகளை செய்தாலே பிரச்சினை பின்னேறும் . மக்கள் முன்னேறுவார்கள்...ஆர்ப்பாட்டகாராகள் ஆட்சியாளர்களாகவும் சமூக சேவகர்களாகவும் மாறுவார்கள்........அனாதை கிராமங்கள் அமெரிக்காவிற்கு வகுப்பெடுக்கும்.................!!!!
அணையும் நேரத்தை
ஆவலுடன் எதிர்நோக்கும்....
இனா ஆனா.........
...........அன்வர்தம்பி...........